தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
உச்ச நீதிமன்ற தீர்ப்பு : `பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிப்பு’ - வழக்கறிஞர் வில்சன்
தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வந்தது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. ஆனால் இதை ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பவில்லை.
அதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்தார்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சட்டவிரோதமானது
அந்த தீர்ப்பில், ``ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதமானது" எனக் குறிப்பிட்டு, சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார்.

வழக்கறிஞர் வில்சன், ``அரசு தரப்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றமே அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, அந்த மசோதாக்கள் இன்று முதல் அமலுக்கு வரும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், எந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையோ அந்த மசோதாக்களைதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதையும், மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் இனி பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்பட முடியாது. இன்றிலிருந்து அவர் அந்தப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்." என்றார்.