வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
தென்காசி: பள்ளி படிக்கட்டுக்கு நடுவே புதைக்கப்பட்ட மின்கம்பி - அதிகாரிகள் அலட்சியத்தால் அச்சம்!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக சுமார் 17.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே உள்ள காலியிடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் வகுப்பறை புதிய கட்டடத்துக்கு நடுவே மின்கம்பத்தின் 'ஸ்டே ஒயர்' புதையும்படி பள்ளிக்கட்டட பணிகள் முடிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில், "பள்ளியின் புதிய கட்டட பணிகள் நிறைவுபெற்று கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படவில்லை. முன்னதாக, வகுப்பறை கட்டட பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதம் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதன்பிறகு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளி கட்டடத்தின் படிக்கட்டுகளில் மின்கம்பத்தின் 'ஸ்டே ஒயர்' செல்லும்படி புதைத்து கட்டடம் கட்டப்பட்டிருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. பள்ளிக் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டுள்ளதை அதிகாரிகள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என புரியவில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
தொடர்ந்து பள்ளி தரப்பில் பேசியவர்கள், "ஸ்டே ஒயர் மற்றும் மின்கம்பத்தை அகற்றுவதற்கு ஊராட்சி சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. பணிகளை உடனடியாக தொடங்கி சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.