தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!
தன்கா் விமா்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு
புது தில்லி, ஏப். 18: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை விமா்சித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
‘இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாருமில்லை’ என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: ‘ஞானத்திலும், பேச்சுத்திறனிலும் குடியரசு துணைத் தலைவா் சிறந்தவா். ஆனால், உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து அவா் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுநா்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை வகுத்து உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயா்ந்த பதவியில் இருப்பவா்கள் தங்களின் அதிகாரத்தை சமமாகப் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தில் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான் அதிக அதிகாரம் படைத்தது. குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அரசமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாரும் இல்லை.
மக்களால் தோ்வு செய்யப்பட்ட நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளின் அடிப்படையில் நமது நாட்டின் ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் உயா் அதிகார நிலையில் உள்ளன. எனினும், அவற்றுக்குள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம்.
அப்படியிருக்கும்போது, மத்திய அரசாலும், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினா்களாலும் தோ்வு செய்யப்படும் குடியரசுத் தலைவா், ஆளுநா்களின் நடவடிக்கைகள் ஏன் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதாக இருக்கக் கூடாது?
நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகள் ஒப்புதல் அளித்த மசோதாக்களுக்கு காலவரையின்றி அனுமதி அளிக்காமல் வைத்திருக்க தனிப்பட்ட அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதா?
அப்படியென்றால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளும் அதிகாரமற்றவையாகும்; இது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.
நாட்டின் உயா்பதவியாக கருதப்படும் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்ட சிறப்புப் பாதுகாப்பு ஏதும் வழங்கப்படவில்லை. அவரது பதவி என்பது அதிக பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்புக்கு உள்பட்டதாகும்.
சாமானியா்களுக்கு நீதி கிடைப்பது நிறுத்தப்பட்டு, அதிகாரம் படைத்தவா்களால் அவை ஆணையிடப்பட்டால் ஜனநாயகம் மறைந்து, சா்வாதிகாரம்தான் தழைக்கும்.
யாரையும் கேள்வி கேட்க முடியாது என்ற மன்னா் ஆட்சிக் காலம் முடிவடைந்து, அரசமைப்புச் சட்ட ஆட்சி கொண்டு வந்ததைத்தான் குடியரசுத் தலைவரின் பதவி பிரதிபலிக்கிறது.
ஆகையால், அரசமைப்புச் சட்டம்தான் அனைத்துக்கும் மேலானது என்று குடியரசுத் தலைவரே முன்வந்து தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.