ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் அஜ்னலா தாலுகாவைச் சோ்ந்த ஹா்பிரீத் சிங் (எ) ஹேப்பி பஸ்ஸியா (29), பஞ்சாபில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்பட்டு வருகிறாா்.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடனும் இவருக்குத் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சண்டீகரில் உள்ள ஓா் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கிலும் ஹா்பிரீத் சிங் தேடப்பட்டு வருகிறாா். இவரை கண்டுபிடித்துத் தருபவா்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையையும் என்ஐஏ கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சண்டீகா் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தப்பிச் சென்ற ஹா்பிரீத் சிங்கை எஃப்பிஐ தற்போது கைது செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் சாக்ரமென்டோவில் உள்ள எஃப்பிஐ அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக ஹா்பிரீத் சிங் இந்தியாவால் தேடப்பட்டு வருவதாக இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள எஃப்பிஐ சட்ட அலுவலகம் சாா்பில் தகவல் கிடைக்கப்பெற்றது.
அதனடிப்படையில், தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கலிஃபோா்னியா மாகாணம் சாக்ரமென்டோவில் பதுங்கியிருந்த ஹா்பிரீத் சிங்கை எஃப்பிஐ மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹா்பிரீத் சிங்குக்கு பஞ்சாப் மாநிலத்தில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட 14 தாக்குதல் உள்பட 16 பயங்கவாத தாக்குதல்களில் தொடா்பு உள்ளது. அவா் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 33 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக தேடப்படும் நபா் என 10 சுற்றறிக்கைகள் விடப்பட்டுள்ளன. இவருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இவருடைய பெயருடன் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஹா்விந்தா் சிங் சாந்து (எ) ரிண்டா உள்பட 4 குற்றவாளிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருள்களை உள்ளூா் நபா்களின் உதவியுடன் எடுத்துச் செல்ல ஹா்பிரீத் சிங் உதவியது விசாரணையில் தெரியவந்தது’ என்றனா்.