வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
`பாஜக இளைஞரணி தயாராக இருக்க வேண்டும்..!' - மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சியின் 13வது மாநிலத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.
மேள தாளங்கள் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மற்றும் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் இணைந்து அவரை நாற்காலியில் அமர வைத்துள்ளனர்.

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான எழுச்சி
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நயினார் நாகேந்திரன். செய்தியாளர் சந்திப்பில் அனைத்து நிர்வாகிகளுக்கும் பெயர் சொல்லி நன்றி தெரிவித்தார்.
"இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் (திமுக) ஆட்சியை அகற்றுவதற்காக நான், என் மண் என் மக்கள் யாத்திரையில் பெரும் எழுச்சியைப் பார்த்தேன். அந்த எழுச்சியின் முடிவு 2026ல் தெரியும் என நினைக்கிறேன்.
அதற்காக இன்று நடக்கிற பாலியல் வன்கொடுமைகள், போதை பழக்க வழக்கங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் எங்களைக் காட்டிலும் பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதை நீங்கள் இந்தச் சமூகத்துக்கு ஆற்றுகிற சேவையாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி பற்றி உங்களுக்குத் தெரியும். உலகிலேயே காங்கிரஸைப் போன்ற ஊழல் கட்சி கிடையாது. அவர்களுடன்தான் இன்று திமுக கூட்டணி வைத்து, மாநில சுயாட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி செய்த குற்றத்தின் ஓர் அங்கமாக இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது ஹெரால்டு பேப்பர் ஊழல் குற்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடரவுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கள் இளைஞரணி சார்பாக போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இதற்கான தேதியையும் நேரத்தையும் நாங்கள் அறிவிப்போம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் ஆர்பாட்டத்துக்குத் தயாராக வேண்டும்.
அதேபோல பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்காக, பொன்முடிக்கு எதிராக மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர். அதற்கான வழிகாட்டுதல்களை தேசிய மகளிர் அணி தலைவர் வழங்குவார்." எனப் பேசினார்.