`வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; தமிழ்நாடு போராடும்,வெல்லும்’ - சட்டப்பேரவையில் உற்சாகமான ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இருமனுக்களை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகியிருந்தார். ஆளுநர் ரவி தரப்பில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கில், "2வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்" என்றும் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பு படியே ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது" என உச்ச நீதிமன்றம் ஆளுநரை கண்டித்திருக்கிறது.
மேலும், "தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்." என்று அழுத்தமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
"எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததுள்ளது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்ச நீதிமன்றம் இதை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து இன்று சட்டபேரவையில் பேசியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி. தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தையும் ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs