நெல்லை உள்பட 4 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மே 29, 30இல் சுற்று நீதிமன்றம்
Doctor Vikatan: ஏசி அறையில் இருந்தால் கிட்னி ஸ்டோன் வருமா?
Doctor Vikatan: ஏசி செய்யப்பட்ட அறைகளில் இருப்போருக்கும், அலுவலகங்களில் வேலை செய்வோருக்கும் கிட்னி ஸ்டோன் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என சமீபத்தில் வீடியோ ஒன்றில் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை. ஏசி என்பது தவிர்க்க முடியாததாக உள்ள இன்றைய சூழலில் கிட்னி ஸ்டோன் வராமல் எப்படித் தடுப்பது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

ஏர் கண்டிஷனர் விஷயத்தில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் ஏசி செய்திருக்கிறோம் அல்லது ஏசி செய்யப்பட்ட சூழலில் வேலை செய்கிறோம் என்ற நிலையில், அதிக நேரம் அந்தச் சூழலுக்கு உடல் ஆட்படுவதால், உடலில் ஈரப்பதம் இருக்காது.
ஏசி செய்யப்பட்ட இடத்தில் இருக்கும்போது பொதுவாக பெரிய அளவில் தாகம் எடுக்காது. நம்மில் பலரும் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்கும் வழக்கம் வைத்திருக்கிறோம். தண்ணீர் குடிக்கும் அளவு குறையும்போது சிறுநீரகங்களுக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் (Renal blood flow ) குறையும். அப்படிக் குறையும்போது 'கவுன்ட்டர் ரெகுலேட்டரி மெக்கானிசம்' என்ற செயல் சிறுநீரகங்களில் தூண்டப்படும்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்காக, நீர்ச்சத்தை இது குறைக்கும். இதுபோன்ற நேரங்களில் ரத்தத்தின் அடர்த்தி சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ரத்தத்தின் அடர்த்தி அதிகமானால், சிறுநீரகத்தின் கழிவு வெளியேற்றச் செயல் பாதிக்கப்படும்.
இதன் விளைவாக நம் உடலில் உள்ள நச்சுக் கனிமங்களான கால்சியம் ஆக்ஸலேட், யூரிக் ஆசிட் போன்றவையும் அதிகம் வரத் தொடங்கும். இதன் காரணமாக சிலருக்கு கிட்னி ஸ்டோன்ஸ் உருவாக வாய்ப்பு உண்டு.

மற்றபடி ஏசி அறையில் இருப்பதே ஆபத்து, ஏசி அறையில் இருக்கும் எல்லோருக்கும் கிட்னி ஸ்டோன்ஸ் வரும் என்று அர்த்தமில்லை. சராசரியாக ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என ஒரு கணக்கு இருக்கிறது. அதாவது 3 முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் இன்னும் அரை லிட்டர் அதிகம் குடிக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது இதுபோன்ற பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அரபு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளில் வருடத்தின் பல மாதங்கள் வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். அங்கெல்லாம் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது. அந்தச் சூழ்நிலையில் வழக்கத்தைவிட சற்று அதிகம் தண்ணீர் குடிப்பது, உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.