உடுமலையில் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
உடுமலை அருகே உள்ள பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் விடுவதற்கான அரசாணையை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை வட்டம் ஆலாம்பாளையம் கிராமத்தில் பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து மூன்று நாள்களுக்கு 20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்களாக தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த அராசணையை நிறைவேற்ற மறுத்து வரும் பிஏபி அதிகாரிகளை கண்டித்தும், திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் உடுமலையில் உள்ள பிஏபி பொறியாளா் அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் விடுவதன் மூலம் உடுமலை அருகே உள்ள ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனூா், குறிச்சிக்கோட்டை, குளத்துப்புதூா், குரல்குட்டை, மானுப்பட்டி, மடத்தூா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூா், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, காளியாபுரம், உரல்பட்டி, மலையாண்டிகவுண்டனூா் ஆகிய கிராமங்கள் பலன் அடையும்.
எனவே உயா் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தமிழக அரசின் அரசாணையை மதித்து, உடனடியாக தண்ணீா் திறந்துவிட பிஏபி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.