``உடனடியாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்" - கொதிக்கும் வைகோ
வால்பாறை தேயிலை தோட்டம் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவம்! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பாம்பை போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை… சிலு சிலுவென வீசும் குளிர் காற்று.. அவ்வப்போது முகம் மறைக்கும் மேக கூட்டம். சில சமயம் சாரலாக பெய்யும் மழை… உண்மையிலேயே மிகவும் ரம்மியமாக இருந்தது வால்பாறை.!
முதல் முறையாக குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சென்னையில் இருந்து வெளியூருக்கு சுற்றுலா கிளம்பினேன். அதுவும் ரொம்ப நாள் பார்க்க விரும்பிய வால்பாறை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை.
அத்தனையும் தேயிலைச் செடிகள். கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமை தான். சில இடங்களில் ஓங்கி உயர்ந்த மரங்கள். வரிசையாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள்.
வால்பாறையில் இரவு ஓட்டலில் தங்கி விட்டு, மறு நாள் காலையில் சாப்பிட்ட பிறகு காரில் சுற்றிப்பார்க்க கிளம்பினோம். தேயிலை தோட்டங்களுக்குள், வகிடு எடுத்தார்போல் இருக்கும் பாதை வழியாக வழுக்கிச் சென்றது கார். ஓட்டுனர் உள்ளூர் நபர் என்பதால், ஒவ்வொரு இடத்தையும், ஊரின் அருமை பெருமைகளையும் சொல்லிக்கொண்டே வந்தார்.
ஓரிடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். மழையும் தூரிக் கொண்டிருந்தது. எனினும் எந்தவித சலனமும் இன்றி அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் பேசினோம்.
“நான் பிறந்து சின்னபிள்ளையாக இருக்கும்போது, எங்க அம்மா இங்கே தூக்கிட்டு வந்திட்டாக. நானும் வளர்ந்து குமரியாகி என்னையும் கட்டிக்கொடுத்துட்டாக. அவுகளும் இங்கே தான் தேயிலை பறிக்கும் தொழில் செய்யுறாக” என்று காளியம்மாள் சொல்லும்போது அவருக்குள் லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது.
இதற்கிடையே, அவர்கள் வளர்க்கும் நாய் ரோஷியும், சாலையில் அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களை விரட்டிச் செல்வதும், பின்னர் தேயிலை தோட்டத்திற்குள் வருவதுமாக இருந்தது.
“வீட்டில நாயை விட்டுட்டு வர முடியாதுங்க. 4 நாளைக்கு முன்னாடி சாயந்திர நேரம் சிறுத்தை ஒன்னு வந்துச்சு. திடீர்னு ரோஷி மேல பாய்ஞ்சிருச்சு. சத்தம் கேட்டு நாங்க வந்து பார்க்குறதுக்குள்ள புதருக்குள்ள மறைஞ்சு ஓடிருச்சு. நல்லவேளை அதுக்கு காலில் லேசான காயம் மட்டும் தான் ஏற்பட்டுச்சு. அதான் இப்ப வேலைக்கு வரும்போது, ரோஷியையும் கூட்டிட்டு வந்திடுவேன்” என்று அவர் சொல்லும்போது நாய் மீது உள்ள பாசமும், அக்கறையும் மேலிடுகிறது.
சிலர் தங்களுடைய செல்போனில் பாட்டு கேட்டுகொண்டே வேலை பார்க்கின்றனர். அதாவது மெல்லிய வால்யூமில் அவர்களுக்கு மட்டுமே கேட்கும்வகையில் வைத்திருந்தனர். கண்காணிப்பாளர் வந்தால் திட்டுவார் என்பதால், சத்தத்தை குறைத்து வைத்து, பாட்டு கேட்கின்றனர்.
“எருக்கச்செடியோரம் இருக்கிப்புடிச்ச ஏன் மாமா.. உருகும் மையப்போல.. உருகித் தவிச்சேன்.. பாடலை ரசித்து கேட்டு கொண்டே வேலை பார்த்த வனப்பேச்சியிடம், ஏன் பாலிதீன்கவர் போர்த்தி இருக்கீங்க..?” என பேச்சு கொடுத்தேன். “தேயிலை செடிகளில் அட்டைப்பூச்சி அதிகம் இருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கும், மழையில் நனையாமல் இருக்கவும் பாலிதீன் கவர் தான் பெஸ்ட்” என்றார் வனப்பேச்சி.
ஒவ்வொரு இடத்திலும் 10 பேர் அல்லது 20 பேர் ஒன்றாக தேயிலை பறிக்கின்றனர். பறிக்கின்ற பச்சை தேயிலையின் எடைக்கு ஏற்ப கூலி வழங்கப்படுகிறது. “ஒரு நாளைக்கு ரூ.450 ரூபாயில் இருந்து அதிகபட்சம் ரூ.800 வரை கூலி கிடைக்கும். தனியார் தேயிலை எஸ்டேட் நிறுவனம் குடியிருக்க தொகுப்பு வீடுகள் வழங்கி இருக்கிறது. மழை காலங்களில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.
ராத்திரி நேரத்தில் யானை, சிறுத்தை போன்ற விலங்குகளால் கொஞ்சம் தொந்தரவு இருக்கும். தேயிலை பறிக்கும்போது, புதரில் சில சமயம் கரடிகள் பதுங்கி இருக்கும். அதனால் சூதானமாக இருக்கனும். எந்த நேரத்தில் யானை, சிறுத்தை ஊருக்குள் புகும்னு சொல்லமுடியாது” என்றார் மற்றொரு பெண்மணி.
அவர்களிடம் இருந்து விடைபெறும் போது மழை விட்டிருந்தது. ஆனால், மேக கூட்டங்கள் சூழ்ந்து காலை 11 மணிக்கே இருள் சூழ்ந்திருந்தது. மனம் முழுக்க இந்த எளிய மக்களின் உரையாடல் நிரம்பி இருந்தது.!
-சி.அ.அய்யப்பன்
சென்னை
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.