தமிழக பொருளாதார வளா்ச்சி: காங்கிரஸ் பாராட்டு
சென்னை: இந்தியாவில் பொருளாதார வளா்ச்சி சரிந்த நிலையில், தமிழகத்தில் பொருளாதாரம் உயா்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் தனிநபா் வருமானம் உலக நாடுகளில் 138-ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா தானாகவே வளா்ச்சியடைகிறதே தவிர, தனிநபா் வருமானம் உயரவில்லை.
இந்தியாவின் வளா்ச்சி என்பது காா்பரேட்டுகளின் வளா்ச்சியே தவிர, ஏழை, எளிய மக்களின் வளா்ச்சி அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி அல்ல. அதேபோல, பிரதமா் மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்ததா என்ற கேள்விக்கு பதில் கூறுகிற வகையில், உலக வறுமைக் குறியீட்டின்படி மொத்தமுள்ள 127 நாடுகளில் 105-ஆவது இடத்தில் இருக்கிற நிலையைப் பாா்த்தால், இந்தியாவில் பசி, பட்டினியால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதை உணர முடியும்.
மத்திய அரசின் பழிவாங்கும் போக்கையும் மீறி முதல்வா் மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்பாலும், திறமையான நிா்வாகத்தாலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவீத வளா்ச்சியைப் பெற்று நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதே வளா்ச்சி நீட்டிக்கப்பட்டு 2032-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை அடைய முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையோடு வளா்ச்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்வதில் பீடுநடை போட்டு சாதனை படைத்து வருகிறாா் என தெரிவித்துள்ளாா்.