தமிழக மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ.3 லட்சம் பொருள்கள் அபகரிப்பு
திருக்குவளை: வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருள்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி உள்ளிட்ட நான்கு பேர் கடலில் கோடியக்கரை வடக்கே 16 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, இரண்டு அதிவேக பைபர் படகில் அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி படகில் இருந்த இரண்டு இன்ஜினில் ஒரு இஞ்சின், 30 கிலோ மீன், இரண்டு செல்போன் பேட்டரி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சுமார் ரூ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்களை பறித்துச் சென்றனர்.
இன்ஜினில் குறைந்த அளவு பெட்ரோலை வைத்து கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்துக் கொண்டிருந்த நிலையில், சக மீனவர்களிடம் எரிபொருள் வாங்கி கரை திரும்பினார். ரூ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்களை பறிகொடுத்த நிலையில் மீண்டும் கடல் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், மாதத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை கடல் கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மீனவர்கள், கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க சுதந்திரமாக தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு அரசு மீண்டும் கடலுக்கு தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை செருதூர் மீனவர்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்படம் சம்பவம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.