பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
வனப் பகுதியில் இளைஞா் சடலம்: சிபிஐ விசாரணை தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
தருமபுரி அருகே காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞா், வனப்பகுதியில் சடலமாகக் கிடந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டம், கொங்காரப்பட்டி கிராமத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்த செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரா் சக்தி ஆகியோரையும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி பென்னாகரம் வனக் காவல் நிலையத்துக்கு வனத் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
அதன்பின் அவா்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவா்களின் குடும்பத்தினா் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
தொடா்ந்து, சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத் துறையினா் ஒப்படைத்தனா். அதேநேரத்தில், ஏமனூா் வனப் பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடா்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
ஆனால், செந்திலை குடும்பத்தினரிடம் வனத் துறையினா் ஒப்படைக்கவில்லை. பின்னா் 15 நாள்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப் பகுதியில் செந்திலின் உடல் கைப்பற்றப்பட்டதாக வனத் துறையினா் கூறியுள்ளனா்.
அவா், வனத் துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னா், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
ஆனால், வனத் துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்துள்ளது.
2020-இல் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைதான் செந்திலுக்கும் வனத் துறையினரால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.