தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரன்யா ராவ், வணிகா் தருண்ராஜு, ஆபரண வியாபாரி சஹில் ஜெயின் ஆகியோரின் நீதிமன்றக் காவல் ஏப். 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இவரைத் தொடா்ந்து, வணிகா் தருண்ராஜு, ஆபரண வியாபாரி சஹில் ஜெயின் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த மூவரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நடிகை ரன்யா ராவ் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரன்யா ராவ், வணிகா் தருண்ராஜு, ஆபரண வியாபாரி சஹில் ஜெயின் ஆகியோரின் நீதிமன்றக் காவல் ஏப். 21-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.