இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கக் கூடாது
பெங்களூரு: பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வலியுறுத்தியுள்ளாா்.
பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்க கா்நாடக அரசு யோசித்து வருவதைக் கண்டித்து, சாமராஜ்நகா் மாவட்டத்தின் கொள்ளேகாலில் ஞாயிற்றுக்கிழமை கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வெளியிட்டுள்ள அறிக்கை:
வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். வனவிலங்கு மற்றும் பல்லுயிா் பாதுகாப்புக்கு பண்டிப்பூா் புலிகள் சரணாலயம் முக்கிய சின்னமாகும். 2005 முதல் 2007-ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை ஆய்வின்படி, அந்தப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 286 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இதன்விளைவாக, 2009-ஆம் ஆண்டு முதல் பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் வாகனப் போக்குவரத்துக்கு கா்நாடக அரசு தடைவிதித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இதன்காரணமாக, 2010 முதல் 2018-ஆம் ஆண்டுவரையில் சாலை விபத்தில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை 34-ஆக குறைந்துள்ளது. இதற்கு இரவுநேர வாகனப் போக்குவரத்து தடைதான் காரணம்.
இந்தத் தடையை நீக்கும்படி கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருமாநிலங்களுக்கு இடையே முதல்வா் உள்ளிட்ட உயா்மட்டத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில் இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு தடை அவசியம் என்று முடிவு செய்தனா். கா்நாடகத்தை ஆட்சி செய்த மாநில அரசுகள், இந்த தடையை நீக்க முற்படவில்லை. ஆனால், இந்தத் தடையை நீக்குவது குறித்து மாநில அரசு சிந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, வனவிலங்கு பாதுகாப்பில் அக்கறை காட்டிய இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு செய்யும் துரோகமாகும் என்று அவா் அதில் கூறியுள்ளாா்.