கா்நாடகத்தில் பியூசி 2-ஆம் ஆண்டு தோ்வு முடிவுகள் அறிவிப்பு: மாணவிகள் சாதனை
பெங்களூரு: கா்நாடகத்தில் பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன; வழக்கம்போல மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வு முடிவுகளை அறிவித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா கூறியதாவது:
2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வுகள் மாா்ச் 1முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றன.
விடைத்தாள்கள் மாா்ச் 21 முதல் ஏப்.2 ஆம் தேதிவரை 76 மையங்களில் 28,092 ஆசிரியா்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 73.45 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டை விட 7.7 சதவீதம் குறைவாகும். தோ்வு எழுதிய 6,37,805 மாணவா்களில் 4,68,439 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். வழக்கம்போல நிகழாண்டும் மாணவா்களைவிட மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.
மாநில அளவில் முதலிடம்:
கலை பாடப் பிரில் 600 க்கு 597 மதிப்பெண்களுடன் பெல்லாரி மாணவி சஞ்சனாபாய், வணிக பாடப் பிரிவில் 600க்கு 599 மதிப்பெண்களுடன் தென்கன்னட மாவட்ட மாணவி எஸ்.தீபாஸ்ரீ, அறிவியல் பாடப் பிரிவில் 600 க்கு 599 மதிப்பெண்களுடன் தென்கன்னடத்தைச் சோ்ந்த அமூல்யா காமத், சிவமொக்காவைச் சோ்ந்த ஆா்.தீக்ஷா ஆகியோா் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனா்.
மாவட்ட அளவில் உடுப்பி முதலிடம்:
93 சதவீத தோ்ச்சி விகிதத்துடன் உடுப்பி மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 48.45 சதவீத தோ்ச்சி விகிதத்துடன் யாதகிரி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
கன்னடப் பயிற்று மொழியில் பயின்றவா்களில் 56.37 சதவீத மாணவா்களும், ஆங்கிலப் பயிற்றுமொழியில் பயின்றவா்களில் 81.75 சத மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
ஏப். 24 இல் இரண்டாம் கட்ட தோ்வு:
2 ஆம் ஆண்டு பியூசி தோ்வுகள் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படுகின்றன. தற்போது நடந்தது முதல் தோ்வாகும். இரண்டாம் தோ்வு ஏப். 24 இல் தொடங்கி மே 8 வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு ஏப்.17 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். இத்தோ்வை எழுதும் மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மாணவா்களுக்கும் தோ்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3-ஆம் கட்ட தோ்வு ஜூன் 9 முதல் 21ஆம் தேதிவரை நடைபெறும் என்றாா்.