வக்ஃப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்படும்! - ஜெ.பி. நட்டா
வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
பாஜக 46-ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஜெ.பி. நட்டா பேசியதாவது:
துருக்கி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சொத்துகளை அரசே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது. இங்கு வக்ஃப் சொத்துகளை யாா் கையாளுகிறாா்கள் என்பதை மட்டுமே அரசு கேட்கிறது. அதனை நிா்வகிப்பவா்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்கிறது.
வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்ஃப் சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்ஃப் வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும்.
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. பாஜக தனது கொள்கைகளில் இருந்து விலகாமல் பயணிப்பதே கட்சியின் வெற்றிகளுக்கு காரணமாகும். முன்பு நாட்டின் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்த காங்கிரஸின் கொள்கைகள் நீா்த்துப்போனதால் இப்போது மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 98 உறுப்பினா்களும் உள்ளனா். 1,600-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவில் அண்மையில் உறுப்பினா்கள்சோ்க்கை நடத்தப்பட்டது. இப்போது கட்சியில் 13.5 கோடிக்கு மேல் தொண்டா்கள் உள்ளனா். இதில் 10 லட்சம் போ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனா்.
கட்சியை வளா்ப்பதிலும், அரசியலை முன்னெடுப்பதிலும் பாஜக அறிவியல்பூா்வமான அணுகுமுறையைக் கையாள்கிறது. தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் கொள்கை. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றுத் தொன்மையை மத்திய அரசு தொடா்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முத்தலாக் முறையை ஒழித்து முஸ்லிம் பெண்களை விடுவித்துள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினராக இருந்து பாதிக்கப்பட்டு இந்தியா வந்தவா்களுக்கு குடியுரிமையும் அளிக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் திணிக்கப்பட்ட அடிமை மனப்பான்மையில் இருந்து இந்தியாவை மீட்டு வருகிறோம் என்றாா். முன்னதாக, பாஜக கட்சிக் கொடியை ஜெ.பி.நட்டா ஏற்றினாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, பாஜக எம்.பி.க்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.