அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!
வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை அதிகரிக்க வேண்டும் எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சீன தூதரக செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சீரான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு சீன பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சீன உற்பத்தியானது முழுமையான மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் தொழில்துறை அமைப்பை அடித்தளமாகக் கொண்டது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிலையான முதலீடு மற்றும் புதுமைகளில் வலுவான கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான மேம்பாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 30% வளர்ச்சிக்கு சீனா உதவுகிறது.
உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு, பலதரப்பு வணிக அமைப்பைப் பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
சீனா - இந்தியா பொருளாதார மற்றும் வணிக உறவு, இருதரப்பு நன்மையை அடிப்படையாகக் கொண்டது.
அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதால், உலக நாடுகள், குறிப்பாக தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமை பறிக்கப்படுகிறது. இதனால், இரண்டு பெரிய வளரும் நாடுகளும் ஒன்றிணைந்து சிரமங்களைச் சமாளிக்க வேண்டும்.
வணிகம் மற்றும் வரி மீதான போரில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் உண்மையான பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசென்ற ஆப்பிள்!