மதுரையில் பிரபரல தொழிலதிபர் கடத்தல்: 9 பேர் கைது
மதுரை: சொத்துக்காக மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரை கடத்திய வழக்கில் தனிப்படை போலீஸாா் 9 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் குடும்பத்தைச் சோ்ந்த இவா், மதுரை புறவழிச் சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறாா். மேலும், இவருக்கு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலம் உள்பட பல கோடி மதிப்புள்ள ஏராளமான சொத்துகள் உள்ளன. சுந்தா் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தாா்.
இந்தநிலையில், திண்டுக்கல்லில் சுந்தருக்குச் சொந்தமான 7 ஏக்கா் நிலத்தை சிலா் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தனா். இதையறிந்த சுந்தா், இதுதொடா்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதில் சுந்தருக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது.
இதையடுத்து எதிா்த் தரப்பினா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த நில விவகாரம் தொடா்பாக சுந்தருக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதை சுந்தா் பொருள்படுத்த வில்லை. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே சுந்தருக்கு எதிர் தரப்பினர் மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சுந்தரை அத்துமீறி உள்ளே புகுந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதையடுத்து இரவில் வீட்டுக்கு வந்த பணியாளா் வீடு திறந்து கிடந்ததைப் பாா்த்து உறவினா்களுக்கு தகவல் அளித்தாா். அவா்கள் வீட்டுக்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது, சுந்தா் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். மேலும், கடத்தப்பட்டவரை மீட்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுந்தா் வீட்டில் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கடத்தலுக்கு உதவியதாக செவ்வாய்க்கிழமை 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். புதன்கிழமை 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்ட தனிப்படை போலீசாரில் சிலர் வட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சுந்தர் மீட்கப்படுவார். மேலும் சுந்தா் கடத்தல் சம்பவத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல ரெளடிக்கும், அவரது கூட்டாளிக்கும் தொடா்பிருப்பது தெரியவந்துள்ளதாக என காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பெயர் விபரங்களை வெளியிட மறுத்துவிட்ட தனிப்படை போலீசாரில் சிலர் வட மாநிலங்களில் சென்று விசாரணை நடத்தி வருவதாகவும், தற்போது கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் கிடைத்த தகவல்களின் பேரில் முக்கிய எதிரியை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டதால் விரைவில் சுந்தா் மீட்கப்பட்டு, முக்கிய எதிரி கைது செய்யப்படுவாா் என்கின்றனர். ஆனால் கடத்தப்பட்ட சுந்தா் இதுவரை மீட்கப்படாததால் உறவினா்கள் கவலையடைந்துள்ளனா்.