Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
தலைநகரில் புதுப்பொலிவுடன் டிடிஇஏ பள்ளிகள்! தமிழ் மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை
ம.ஆ.பரணிதரன்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வமாகாது என்பது இந்த திருக்குறளின் பொருள். இதற்கு ஏற்ப தலைநகரில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மாணவர்களுக்கு கல்வி புகட்டும் களஞ்சியமாக விளங்கி வருகிறது தில்லி தமிழ் கல்விக் கழகம் (டிடிஇஏ).
1919 -ஆம் ஆண்டு சிம்லாவில் பாரம்பரிய தமிழ் மொழி மற்றும் அதன் மதிப்புகளை பிள்ளைகளுக்குக் கற்பிக்க விரும்பி, மதராஸ் கல்விச் சங்கம் என்று பெயரில் கல்வி நிறுவனம் பதிவு செய்யப்பட்டு 1923-இல் முதலாவது பள்ளி நிறுவப்பட்டது. 1924, ஜனவரியில் சிம்லாவில் இருந்து தில்லி மந்திர் மார்க் பகுதிக்கு பள்ளி மாற்றப்பட்டது.
ஓர் ஆரம்பப் பள்ளியாக தலைநகரில் செயல்படத் தொடங்கி இன்று மந்திர் மார்க், லோதி எஸ்டேட், லக்ஷ்மிபாய் நகர்,மோதி பாக், பூசா சாலை, ஆர்.கே. புரம், ஜனக்புரி ஆகிய ஏழு பள்ளிகளில் கல்விச்சேவையை விரிவுபடுத்தியிருக்கிறது டிடிஇஏ.
இதன் தற்போதைய தலைவராக ஆர்.கே. ராமனும், கௌரவச் செயலராக மத்திய அரசில் பணிபுரியும் ஆர். ராஜூவும், டிடிஇஏ பள்ளிகளின் கல்வி இயக்குநராக சித்ரா ராதாகிருஷ்ணனும் உள்ளனர்.
வசதிகள்: டிடிஇஏ பள்ளியில் சேரும் தமிழ் மாணவர்கள், அவர்களுக்கான கல்விக் கட்டணம் நீங்கலாக வேறு எந்தவொரு கட்டணமோ நன்கொடையோ செலுத்தத் தேவையில்லை என்கிறார் செயலர் ராஜூ. இவரது பதவிக்காலத்தில்தான் டிடிஇஏ நிர்வாகம் எண்மமயமாகி ஏழு பள்ளிகளின் கட்டடங்கள், உள்ட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நவீனமயமாகின.
டிடிஇஏ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதாக கூறுகிறார் ஆர். ராஜூ.
அனைத்து கணக்குகளும் ஆவணப்படுத்தப்பட்டு தணிக்கைக்கு உள்படுத்தப்படுகின்றன. விதிகளின்படி ஆசிரியர்கள் நியமனம் உரிய அரசுக்குழுவின் தேர்வு மூலம் நடக்கிறது. பள்ளிச் சேர்க்கையில் தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரிலேயே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது முழு ஆண்டு என மாணவர்களின் பெற்றோரின் வசதிக்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தலாம்.
தில்லி வாழ் தமிழர் அல்லாத மாணவர்கள் என்றால் அவர்களிடம் கல்விக் கட்டணமும் ரசீதுடன் கூடிய நன்கொடையும் சேர்க்கையின்போது வசூலிக்கப்படுன்றன. அவை பள்ளிகளின் மேம்பாட்டுப்பணிக்கு பயன்படுத்தப்படும்' என்கிறார் ராஜூ.
டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலும் திருக்குறளின் பெருமையை உணர்த்த திருவள்ளுவர் சிலை, பாதுகாப்பை உறுதிப்படுத்த சுற்றுச்சுவர் மற்றும் ஆபத்து காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் தடுப்பான வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த ஆர்.கே. புரம் பள்ளியின் ஆரம்பப்பள்ளி முற்றிலுமாக இடிக்கப்பட்டு நவீனமயமாகியுள்ளன.
ஜனக்புரி பள்ளி வளாகத்தில் பூப்பந்து அரங்கம், மந்திர் மார்கில் ஃப்ளட்லைட் வசதியுடன் கிரிக்கெட் மைதானம், லோதி வளாகத்தில் ஆம்ஃபி திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஜனக்புரியில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட்டு வருகிறது.
ஆசிரியர் வசதிகள்: தமிழகத்தில் இருந்து டிடிஇஏ பள்ளிகளில் வேலைக்காக வரும் ஆசிரியர்கள் தங்குவதற்காக லட்சுமிபாய் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் 25 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் ஊதியத்தைப் பொருத்தவரை சுமார் 95 சதவீத நிதியுதவியை டிடிஇஏவுக்கு தில்லி அரசு வழங்குகிறது. பள்ளிகளின் பாடத்திட்டம், கட்டட மேம்பாடு, வளர்ச்சி போன்றவற்றுக்கு தமிழக அரசும் அவ்வப்போது கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளது. இத்துடன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், மாணவர்களின் பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வழங்கும் நன்கொடைகளைக் கொண்டு பள்ளிகளை டிடிஇஏ நிர்வகிக்கிறது.
தற்போது சுமார் 7,200 மாணவர்களுடன், 385 முழு நேர மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 525 ஊழியர்கள் டிடிஇஏ பள்ளிகளில் பணியாற்றி வருகிறார்கள். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இங்கு நியமிக்கப்பட்டுள்ள பள்ளி முதல்வர்கள் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
கற்பித்தல் வசதி: டிடிஇஏ மாணவர்களின் கல்வி கற்கும் திறன்கள் தொடர் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதாகவும் 100 சதவீத தேர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார் ஆர்.கே. புரம் டிடிஇஏ பள்ளியில் கணித ஆசிரியை டி. சுஜாதா.
"கற்றல் குறைபாடுடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கல்வித் திறனை மூத்த ஆசிரியர்களைக் கொண்டு மேம்படுத்துகிறோம். மாதந்தோறும் இவர்களின் செயல்திறனை மறுஆய்வு செய்கிறோம். 10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஏதுவாக ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு நடத்தப்படுகிறது' என்கிறார் சுஜாதா.
மாணவர்களின் கலைத்திறன் உள்ளிட்ட பிற திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு விழா, வண்ணங்கள் தினம், தாத்தா - பாட்டி தினம், காய்கறிகள் தினம், பட்டமளிப்பு விழாக்கள், புதிய மாணவர்கள் வரவேற்பு விழா, நாடகங்கள் என தொடர்ச்சியாக அவர்களின் பன்முகத்திறன்களை வெளிக்கொண்டு வர நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் வைஃபி இன்டர்நெட் வசதி, சிசிடிவி பொருத்தப்பட்ட கண்காணிப்பு வசதிகள் உள்ளன. நவீனமய (ஸ்மார்ட்) பலகைகளுடன் கூடிய எண்ம வகுப்பறைகள், கணிப்பொறி அறைகள், பரிசோதனைக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மாணவர்களின் அறிவியல் திறன்களை வளர்க்க அகஸ்தியா அறிவியல் கூடம், படைப்பாற்றல் திறனை மேம்படுத்த அடல் டிங்கரிங் பரிசோதனைக்கூடம் உள்ளன.
தமிழுக்கு முன்னுரிமை: தமிழகத்தில் இருந்து மாற்றலாகி டிடிஇஏவில் சேர்ந்த பிள்ளைகள் மொழி ரீதியாக பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்துடன் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்ப வகுப்புகளில் தமிழ் பேசும் ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இது குறித்து லோதி எஸ்டேட் பள்ளி முதல்வர்
ஜெயஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம். இவர், டிடிஇஏ பள்ளியில் 1986-ஆம் ஆண்டில் படித்தவர்.
"ஒரு முன்னாள் மாணவியாக பள்ளியின் நோக்கம், தேவை மற்றும் சேவையை உணர்ந்துள்ளேன். மாணவர்களின்அறிவுத்திறனையும் கல்வித்திறனையும் வளர்க்கும் சூழல் இங்குள்ளது. மாணவர்களிடையே தமிழ் மொழி, கலாசாரத்தை வேரூன்றச்செய்யும் வகையில் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தமிழகம் தொடர்புடைய பண்டிகை நாள்களின்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மாணவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துகிறோம்' என்றார் ஜெயஸ்ரீ.
டிடிஇஏ பள்ளிகளில் மாணவர்கள் தினமும் "திருக்குறளை மனப்பாடம் செய்ய முனைப்புகாட்டப்படுகிறது. தமிழின் மதிப்புகள் மற்றும் பெருமையை ஊக்குவிக்கும் பட்டிமன்றங்கள், பேச்சுப்போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள் டிடிஇஏ பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படுகின்றன. மற்ற பள்ளிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளிலும் டிடிஇஏ பங்கேற்று பல விருதுகளைப் பெற்றுள்ளது.
மோதி பாக் பள்ளியின் தமிழ் ஆசிரியை கே. ராஜராஜேஸ்வரி, டிடிஇஏ பள்ளியில் மாணவர்கள் சேருவது இரு வகை பெற்றோருக்கு பயன் தரும் என்கிறார். முதலாவதாக, தில்லியில் குடியேறும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழ் கலாசாரம், தமிழ் மொழி சிறப்புகளின் தொடர்ச்சி விட்டுப்போகக்கூடாது என்று நினைத்து பிள்ளைகளை சேர்க்கிறார்கள். இரண்டாவதாக, நவீனமுறை கல்வி கற்பிக்கும் வசதியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் கட்டணம் இங்குள்ளது முக்கியக் காரணம் என்கிறார். இவரது இரண்டு பிள்ளைகளும் டிடிஇஏவில்தான் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.
இங்கு பள்ளியில் சேரும் தமிழர் அல்லாத பிற மாநிலத்தவர்களின் பெற்றோர், தமிழக நகரங்களில் அதிகளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால் எதிர்காலத்தில் தங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைத்து அங்கு செல்லும்போது டிடிஇஏவில் தமிழ் பாடங்களை கற்பது அவர்களுக்கு சிறந்த பயனைத் தரும் என்கின்றனர்.
இங்குள்ள மாணவர்களுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சமச்சீர் கல்வி புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது. சமீபத்தில் 100 ஆண்டுகளை நிறைவு செய்த பள்ளிகளின் சேவையைக் குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
கட்டணம் எவ்வளவு? டிடிஇஏ பள்ளிகளில் கல்விக்கட்டணம் பிற பள்ளிகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் பெற்றோருக்கு முதல் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ.400 , இரண்டாம் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ. 300, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் முதல் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ.450, இரண்டாம் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ. 350 மற்றும் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் முதல் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ. 500, இரண்டாம் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ. 400, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் முதல் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ.550, இரண்டாம் குழந்தையாக இருந்தால் மாதம் ரூ. 450 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.