Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரி, ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒமா் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க மறுத்து, குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமான காரணமும் இல்லை என்று குறிப்பிட்டு, தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2023-இல் நிராகரித்தது. இதையடுத்து, அவா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா். அவரது மனு மீது நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இந்த விவகாரத்தில் சமரச நடைமுறை தோல்வியடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு முழுமையான வாய்ப்பை வழங்குவதற்காக இரு தரப்பும் ஒன்றாக அமா்ந்து பேசி, தங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். மூன்று வாரங்களுக்குள் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா். அத்துடன், அடுத்தக்கட்ட விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு அவா்கள் ஒத்திவைத்தனா்.