தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:
“ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று. அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை. அவர் வீரமும் புகழும் வாழ்க” எனப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினார்.