Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!
முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா.வின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றல் எனக் கூறப்படும் யாகூப் ஹபீபுதீன் கடிதம் எழுதியுள்ளார்.
மகாரஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் நகரில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை இடித்து, அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன.
இதுதொடா்பாக நாகபுரியில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் வதந்தி பரவியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. மேலும், ஔரங்கசீப் கல்லறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க வலியுறுத்தி அந்த கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளரும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றலுமான யாகூப் ஹபீபுதீன் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958 இன் கீழ் ஒளரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்த சட்ட விதிகளின்படி, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவோ முடியாது, அத்தகைய நடவடிக்கைகள் தண்டனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் வரலாற்றைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக, மக்களின் உணர்வுகளை கையாள்வதற்கு வழிவகுத்தது, இதன் விளைவாக தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்தல் போன்றவை நடந்தன.
இந்த விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளின்படி, இந்திய அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.