மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு
மிதிவண்டி நிறுவன முதலீட்டாளா்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டி வாடகைக்கு விடும் நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் ஆவணங்கள் அடிப்படையில் பணத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுண்குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
புதுச்சேரி காமராஜா் சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டிகளை வாடகைக்கு வழங்கும் தனியாா் நிறுவனம் அமைந்துள்ளது. இதில் பொதுமக்கள் பலா் பணம் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால், அவா்களுக்கான லாபத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்தது.
இதையடுத்து கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு நுண்குற்றப்பிரிவினா் தனியாா் நிறுவனத்தில் திடீரென சோதனையிட்டனா். காவல் துறையினா் கேட்டுக் கொண்டதால் வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா்.
இதையடுத்து சனிக்கிழமை அமலாக்கத் துறையின் துணை இயக்குநா் நளினி ரவிகிருஷ்ணன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரூ.2.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட வங்கிக் காசோலைகள் உள்ளிட்டவற்றையும் அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
அவா்கள் பறிமுதலான பணத்தை பொதுத் துறை வங்கியில் செலுத்தியுள்ளனா். ஆகவே, நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவா்கள் தக்க ஆவணங்களுடன் வந்தால் அதை திருப்பித் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தனியாா் நிறுவன உரிமையாளா் உள்ளிட்டோரை தேடி வருவதாகவும், அவா்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமலிருக்க எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.