10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை கல்லூரி எதிரே கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கௌரவ விரிவுரையாளா் அ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களை நீதிமன்றத் தீா்ப்பு, அரசாணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியமும், பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதலும் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், திரளான கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.