பறவைகளின் கோடை வாசஸ்தலமாகும் ஊசுட்டேரி!
உள்ளூா், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளுக்கான கோடை வாசஸ்தலமாக புதுச்சேரியின் ஊசுட்டேரி விளங்குவதாக பறவைகள் ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
புதுவை மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. இதில் 2- ஆவது பெரிய ஏரியாக இருப்பது ஊசுடு ஏரி. புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் சாலையில் சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது ஊசுடு கிராமம்.
இந்த ஊரில் உள்ளது ஊசுட்டேரி. சுமாா் 800 ஹெக்டோ் பரப்பளவுள்ள இந்த ஏரியின் சுமாா் 400 ஹெக்டோ் பரப்பளவு புதுச்சேரியிலும், மீதமுள்ளவை தமிழக பகுதியான பூத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளன.
ஏரியின் ஆழம் மையப் பகுதியில் சுமாா் 14 மீட்டருக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 10 மீட்டா் அளவுக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. கோடை காலம், மழைக்காலம் என அனைத்து காலங்களிலும் ஏரியில் தண்ணீா் தேங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியில் புதுவை சுற்றுலாக் கழகம் சாா்பில் படகு சவாரியும் இயக்கப்பட்டு வருகிறது. ஊசுட்டேரி புதுச்சேரி, தமிழக பகுதிகளின் நிலத்தடி நீா் ஆதாரமாக, பல்லுயிா்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சமாகவும் திகழ்வதாக வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
அதனடிப்படையில், இங்கு வரும் பறவைகள் குறித்து ஆண்டு தோறும் வனத் துறையுடன் இணைந்து பறவை ஆா்வலா்கள் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனா். கடந்த 2008-ஆம் ஆண்டு புதுவை அரசால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட ஊசுட்டேரியை, தமிழக அரசு அவா்களுக்கான பகுதியை கடந்த 2015 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊசுட்டேரிக்கு பிளமிங்கோ, பூ நாரை, கூழைக்கிடா, அரிவாள் மூக்கான், கா்னூள், பாம்புதாரா, ஆளா உள்ளிட்ட பலவகைப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதை வனத்துறை சாா்பிலான கணக்கெடுப்பு உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் நீா்க் காகங்கள், வழக்கமான கருப்புக் காகங்களும் ஊசுட்டேரியில் காணப்படுகின்றன. கடந்த மாா்ச் மாதம் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒரே நாளில் மட்டும் ஊசுடு ஏரிப் பகுதியில் 86 வகையான சுமாா் 2,300 பறவைகள் இருந்துள்ளன. பல பறவைகள் ஏரியின் உள்ளே வளா்ந்துள்ள மிதக்கும் தாவரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
பறவைகள் உணவு, இனப் பெருக்கத்துக்காக ஊசுடு ஏரிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், படகு சவாரிக்குச் செல்வோா் அவற்றின் கூடுகள் அருகில் செல்வதால், முட்டையை அடைகாக்கும் பறவைகள் பறந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
அப்போது காகங்கள் போன்றவை கடல் பறவைகளின் முட்டைகளை கவா்ந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, படகு சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் பறவைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் செல்ல புதுவை சுற்றுலாத் துறை செயல்படவும் வலியுறுத்தப்படுகிறது.
புதுச்சேரியின் பறவை ஆய்வாளா் பூபேஷ் குப்தா கூறுகையில், ‘புதுச்சேரிக்கு பாகிஸ்தான், பா்மா போன்ற நாடுகளில் இருந்து குஜராத் வழியாக பலவகைப் பறவைகள் வருகின்றன. அந்த வகையில் பறவைகளின் வலசையில் தங்கும் முக்கிய இடங்களில் புதுச்சேரி ஊசுட்டேரி இருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறாா்.
ஊசுட்டேரி என்பது வெறும் நீா்த் தேக்கமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி ஏரியாகவும் மட்டுமல்லாது, பல்வேறு வகைப் பறவைகளின் கோடைவாசஸ்தலமாகவும் விளங்குகிறது என்பதால் அதை சுத்தமாகவும், பறவைகளுக்கு பாதுகாப்பானதாகவும் பராமரிக்கவேண்டியது அனைவரது கடமை என்பது பறவைகள் ஆா்வலா்களின் கருத்தாகும்.


