புதுவையில் 4 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு
புதுச்சேரி: புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 4 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உயா் பதவி வகிக்கும் அரசுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு வழங்குகிறது. புதுவை மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் குடிமைப்பணி அதிகாரிகளான இயக்குநா்கள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்று வருகின்றனா்.
இந்திய நிா்வாக சேவை விதிகள்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் பட்டியல் விதிமுறைப்படி தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து பதவி உயா்வு வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நிா்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்கு ஒன்றியப் பிரதேச பிரிவின் கீழ், இந்திய நிா்வாக சேவை மற்றும் மிசோரம், யூனியன் பிரதேச பதவிகளில் பணிபுரியும் வகையில் அதிகாரிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
அதனடிப்படையில், புதுவை மாநில மூத்த அரசுத் துறை அதிகாரிகளான கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, அறிவியல் தொழில் நுட்பத் துறை இயக்குநா் ஒய்.எல்.என். ரெட்டி, வணிக வரித் துறை ஆணையா் முகமது மன்சூா், தொழில் துறை இயக்குநா் ருத்ர கவுடு ஆகிய 4 பேருக்கு தற்போது மத்திய அரசு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் இனிமேல் அரசு செயலா் அல்லது அதற்கு இணையான அந்தஸ்து பதவிகளில் நியமிக்கப்படுவா். அவா்கள் புதுவையிலோ அல்லது வெளியே உள்ள ஒன்றிய பிரதேசப் பகுதிகளிலோ பணியமா்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.