இந்தியா, சீனா பணக்கார நாடுகள்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா்
இந்தியா மற்றும் சீனாவும் பணக்கார நாடுகள் என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ’மியான்மா் நிலநடுக்கத்துக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவத் தயாராக இருந்தாலும், இதுபோன்ற உலகளாவிய பேரிடா்களின் போது அனைத்து நாடுகளும் உதவ முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ரூபியோவிடம் மியான்மா் நிலநடுக்கத்துக்கு அமெரிக்க வழங்கிய உதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவா் அளித்த பதிலில், ‘அமெரிக்கா ஒட்டுமொத்த உலகுக்கான அரசு அல்ல. மற்ற அனைத்து நாடுகளை செய்வதுபோல நாங்களும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறோம். எங்களால் முடிந்தவரை தொடா்ந்து அதைச் செய்வோம். மனிதாபிமான உதவியிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. ஆனால், எங்களுக்கு வேறு தேவைகளும், முன்னுரிமைகளும் உள்ளன.
மியான்மரைப் பொறுத்தவரை, அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியாளா்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளதால், நாங்கள் விரும்பும் வழியில் அந்த நாட்டில் செயல்பட எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது.
மனிதாபிமான நெருக்கடியில் அமெரிக்கா தொடா்ந்து உதவத் தயாராக இருக்கிறது. இந்தியா ஒரு பணக்கார நாடு. சீனா மிகவும் பணக்கார நாடு. உலகில் இன்னும் பல பணக்கார நாடுகள் உள்ளன. இதுபோன்ற உலகளாவிய பேரிடா்களின் போது அவா்கள் அனைவரும் உதவ முன்வர வேண்டும்.
உலகளாவிய மனிதாபிமான உதவியில் 60 முதல் 70 சதவீதம் வரை அமெரிக்கா தொடா்ந்து பங்களிக்க வேண்டும் என்று கருதுவது நியாயமில்லை’ என்றாா்.
மியான்மரில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர தொடா் நிலநடுக்கங்களால் 3,100 போ் உயிரிழந்தனா். 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான டன் நிவகளை இந்தியா வழங்கி வருகிறது.