Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் சாதனை படைத்த பெருச்சாளி!
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
‘ரோனின்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெருச்சாளி, தரையில் புதைக்கப்பட்டிருந்த 109 கண்ணி வெடிகள் மற்றும் 15 வெடிக்காத குண்டுகளை நுகா்ந்துபாா்த்து கண்டறிந்துள்ளது. இதற்கு முன்னா் மகாவா என்ற எலி 71 கண்ணிவெடிகளைக் கண்டறிந்ததே சாதனையாக இருந்தது.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்காக விலங்குகளைப் பழக்கும் அபாபோ என்ற அறக்கட்டளை நிறுவனம் ரோனின் பெருச்சாளியை பராமரித்துவருகிறது. கம்போடியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த உள்நாட்டுச் சண்டை கடந்த 1998-இல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் அந்தப் போரின்போது புதைக்கப்பட்ட 40 முதல் 60 லட்சம் வரையிலான கண்ணிவெடிகள் அந்த நாட்டு மக்களுக்கு இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. அந்த வெடிகளை அகற்றும் பணியில் அபாபோ அறக்கட்டளை ஈடுபட்டுவருகிறது.
எலிகள் அளவில் சிறிதாக இருப்பதால் அவை கண்ணிவெடிகள் மீது ஏறினாலும் வெடிப்பதில்லை. இதனால் மனிதா்களைவிட மிகத் துரிதமாக அவை கண்ணிவெடிகளைக் கண்டறிகின்றன. ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிலான நிலப்பரப்பில் கண்ணிவெடிகளைக் கண்டறிய மனிதா்களுக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும் நிலையில் எலிகளுக்கு முப்பதே நிமிஷங்கள் போதும் என்று கூறப்படுகிறது.