கரூர்: 'கழிவறைக்குச் செல்ல மாணவிகளுக்கு தனி பதிவேடு!' - சர்ச்சையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது... மீறி காலணி அணிந்து சென்றால், கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, மாணவிகள் பயன்படுத்தும் பொதுக் கழிவறைக்கு செல்லும்பொழுது தலைமையாசிரியர் அறையில் உள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில், வருகை பதிவேடு போன்று கழிவறைக்கு செல்லும் நேரம், வெளியேறும் நேரம், கழிவறைக்கு செல்வதற்கான காரணம் ஆகிவற்றை மாணவிகள் எழுதி கையொப்பமிட வேண்டும் என மாணவிகளை வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாணவிகள், கரூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்தப் புகாரில் தலைமையாசிரியரின் கட்டுப்பாடுகள் குறித்து பெற்றோரிடமும், மற்ற ஆசிரியர்களிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவிகளை மிரட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கழிவறைக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் மாணவிகளை, கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கழிவறைக்கு வருகை பதிவேடு கட்டாயம் என தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்பந்தப்படுத்தியதால், கடும் மன உளைச்சலில் மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து ,மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த வாரம் ஓய்வு பெற்றதால், புகார் மனு நடவடிக்கையின்றி கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தலைமையாசிரியர் அதே பள்ளியில், பணியாற்றி வருவதால், தேர்வு நேரத்தில் மாணவிகள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மாணவிகள் கழிவறைக்குச் செல்ல அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தனி பதிவேடு பராமரிக்கும் விவகாரம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களை அதிர வைத்திருக்கிறது.