இரவில் கழிப்பறைக்குச் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுப்பு; பெட்ரோல் பங்கிற்கு ரூ.1,65,000 அபராதம்!
பள்ளி ஆசிரியை ஜெயக்குமாரி காசர்கோடில் இருந்து பத்தனம்திட்டாவிற்கு நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோழிக்கோட்டின் பய்யோலியில் உள்ள பெட்ரோல் பங்கில் நின்று, பெட்ரோல் நிரப்பிய பிறகு கழிப்பறை வசதி கேட்டுள்ளார்.
ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கழிப்பறை வசதி இல்லை என ஊழியர்கள் ஜெயக்குமாரியிடம் கூறியிருக்கிறார்கள், பின்னர் பெட்ரோல் பங்கின் மேலாளர் சாவியை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

அடிப்படை வசதி மறுக்கப்பட்டதையடுத்து ஜெயக்குமாரி தான் சந்தித்த சிரமத்தை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை, உள்ளூர் போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்து, அவர்கள் கழிப்பறையை வந்து திறந்துவிட்டுள்ளனர்.
பின்னர் பத்தனம்திட்டாவில் உள்ள மாவட்ட நுகர்வோர் இடர் தீர்வு ஆணையத்தை அணுகி, பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தும் கழிப்பறைக்கு செல்ல அனுமதி மறுத்த பெட்ரோல் பங்க் மீது புகார் அளித்தார் ஜெயக்குமாரி.
அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆணையம் விசாரணை மேற்கொண்டது. பெட்ரோல் பங்க் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஜெயக்குமாரிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
எதிர்த்தரப்பினர் 1,65,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது, மனுதாரருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இழப்பீடு மற்றும் 15 ஆயிரம் ரூபாய் நீதிமன்ற செலவுகள் இதில் அடங்கும்.