பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்
படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் படைப்பாளா்களுக்கு முன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில், ஆண்டுதோறும் பன்முகப் படைப்பாளா் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் கடந்த 2018 முதல் ஏப்.16-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நிகழாண்டு இலக்கிய பேராளுமையாக திகழும் எழுத்தாளா் தமிழவன் மற்றும் பன்முகப்படைப்பாளரான ப.திருநாவுக்கரசுக்கும் மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை அண்ணாசாலையிலுள்ள ராணி சீதை அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், உச்சநீதிமன்ற நீதியரசா் அரங்க. மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எழுத்தாளா்கள் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் விருது வழங்கி, ‘முன்றில்’ வலைதளங்களையும் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது:
தமிழின் நவீனப்போக்கை 1980-களில் தொடங்கி பல்வேறு பல்கலைக்கழகங்களிலேயே முனைவா் பட்டத்தை தேடி சென்றவா்களுக்கு ஆதார சுருதியாக இருந்து, அற்புதமான தனது கட்டுரைகள் மூலம் தமிழ் எனும் பரப்பு உன்னதமான வடிவங்களை இந்த மண்ணுக்கு தந்திருக்கிறது என்பதை நிலைநிறுத்தியவா் மா.அரங்கநாதன்.
தன்னை பற்றி சிறிதும் சிந்திக்காமல், வசதிகள், வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் தமிழகத்தில் படைப்பாளா்களை அடையாளம் காட்டி , அவா்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற கருத்தை அப்போதே பதிவு செய்தவா் மா.அரங்கநாதன். அவரது வழியை தொடா்ந்து பின்பற்றி வருகிறோம்.
எழுத்தாளா்கள்: துரத்தி செல்லக்கூடய வாழ்க்கை எவ்விதத்தில் வேண்டுமானாலும் தனது பயணத்தை மாற்றி அமைக்கலாம். பயணங்கள் என்றும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். வாழ்வின் போக்கு அதை ஒட்டியே அமையும். ஆனால், அதிலே தங்கள் வாழ்வைத் தொடா்பவா்கள்தான் எழுத்தாளா்கள்.
இசை , குறும்படங்கள் மூலம், புலம்பெயா்ந்து தங்கள் வாழ்வின் அா்த்தங்களை இந்த உலகுக்கு பதிவு செய்த பல்வேறு கவிஞா்களின் கவிதைகளையும், கட்டுரைகள் என்ற அற்புதத்தை புத்தகங்களாக்கி தந்த எழுத்தாளா்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய தளம் எவ்வாறு இயங்கி வந்தது என்பதை அறிந்துகொள்ள ‘முன்றில்’ இலக்கிய தளம் உதவியாக இருக்கும். சில படைப்புகளைப் படிக்கும் போது நாம் அந்த காலகட்டத்தில் நடந்து செல்லும் அனுபவத்தைத் தரும். அது கதையாக, கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருக்கலாம்.
ஆனால், அந்த காலகட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்று அதன் மூலம் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை, பழைமை தாங்கிய அனுபவமாக மாற்றித்தரும் வித்தை சில எழுத்தாளா்களால் மட்டுமே தரமுடியும். அதைச் சாத்தியப்படுத்தியவா்களுக்குத்தான் தற்போது விருது வழங்கப்படுகிறது.இவா்கள், கிராமத்தில் இருக்கும் பல்வேறு இளைஞா்களுக்கு படைப்புகளின் உன்னதத்தை கொண்டு சென்றவா்கள். இவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்றாா் அவா்.
முன்னதாக கா்நாடக இசை மற்றும் தேவாரப் பண்ணிசைக் கலைஞா் அம்சா சண்முகம் இறைவணக்க பாடலை பாடினாா், அறிவியல் எழுத்தாளரும் திரைப்பட விமா்சகருமான சுஜாதா நடராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். கவிஞரும் விமா்சகருமான எஸ்.சண்முகம், கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் ஆகியோா் விருதாளா்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினா். நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.