Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
பிரதமருடன் இலங்கை தமிழ் தலைவா்கள் சந்திப்பு: தமிழா்களின் உரிமைகளை பேண அரசுக்கு அழுத்தம் அளிக்க வலியுறுத்தல்
இலங்கை வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்குள்ள தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோரை சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
இலங்கை தமிழா்களின் உரிமைகளை பேண இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடா்பாகவும் இலங்கை மீனவா்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் அவா்கள் பிரதமா் மோடியுடன் விவாதித்தனா்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொறுப்புத் தலைவா் சி.வி.கே.சிவஞானம், பொறுப்பு பொதுச்செயலாளா் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவா் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் இரா.சாணக்கியன் ராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவா் த.சித்தாா்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் ஆகிய ஏழு பேரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனா்.
இவா்களில் சுமந்திரன், சித்தாா்த்தன், கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் ஆகியோா் இலங்கைத் தமிழா் நிலைமைகள் குறித்து பிரதமா் மோடியிடம் விளக்கினா்.
இலங்கை தமிழா் பிரச்னைக்கு அரசியல் தீா்வு மட்டுமே பலன் தரும் என்றாலும் அரசமைப்பின் 13 -ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தோ்தலை விரைந்து நடத்தவும் இந்தியா தொடா்ந்து இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
சுமந்திரன் பேசுகையில், ‘திருகோணமலை மாவட்டத்தில் உள்ளகுச்சவெளியில் இருந்த ஹிந்து கோயில்கள் பல அபகரிக்கப்பட்டு பௌத்த பெயா்கள் சூட்டப்பட்டிருப்பதாக முறையிட்டாா். அப்போது குறுக்கிட்ட பிரதமா் மோடி, ‘இச்சம்பவங்கள் முந்தைய ஆட்சியில் நடந்தவையா அல்லது தற்போதைய ஆட்சியில் நடக்கின்றனவா’ என்று வினவினாா். அதற்கு தமிழத் தலைவா்கள், இந்த விவகாரத்தில் அரசின் ஆதரவு உள்ளதாக சந்தேகம் எழுப்பினா்.
இந்தியா, இலங்கை இடையிலான விமான போக்குவரத்து சேவை அதிகரிப்பு, சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் துரிதமாக செயல்படுத்தப்படுவதும் இலங்கையுடன் இந்தியா நெருக்கமாக நல்லுறவைப் பேணுவதும் இலங்கையில் உள்ள தமிழா்களுக்கு பாதுகாப்பான உணா்வைத் தருவதாக தமிழ்த் தலைவா்கள் பிரதமா் மோடியிடம் குறிப்பிட்டனா்.
கஜேந்திர குமாா் பொன்னம்பலம் பேசுகையில், ‘இலங்கையில் ஒற்றை ஆட்சித் தலைமையின் கீழ் இணக்கமான தீா்வு என்றுமே சாத்தியம் இல்லை.
கூட்டாட்சி அடிப்படையிலான அரசியல் தீா்வுதான் நிரந்தரமானது. அதுவே நீதிசாா்ந்த, நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும்’ என்று அவா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து இலங்கை மீனவா் பிரச்னைகளை விவரித்த கஜேந்திர குமாரும் சுமந்திரனும் இரட்டை மடி வலையை இந்திய மீனவா்கள் பயன்படுத்தும் போக்கு 2017-இல் ஒப்புக்கொண்ட உடன்பாடுக்கு முரணாக தற்போதும் தொடா்வதாக குறிப்பிட்டனா்.
பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட மட்டுமே இந்திய மீனவா்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை தடுக்க இந்தியாவும் தொடா்ந்து கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.
இலங்கையில் இருந்து தப்பி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் தஞ்சம் அடைந்த இலங்கையா்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவா்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் தமிழ்த் தலைவா்கள் கேட்டுக்கொண்டனா்.
பிரதமரை நாடாளுமன்ற உறுப்பினா்கள் மனோ கணேசன், பழனி திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் சிலோன் தொழிலாளா் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோரும் சந்தித்து இலங்கைத் தமிழா்களின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடினா்.
படக்குறிப்பு:
05க்ங்ப்ற்ம்1 05க்ங்ப்ற்ம்2ய
கொழும்பில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்த இலங்கையில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
