நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாகும்! - பெ.செந்தில்குமாா் எம்.எல்.ஏ.
நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வா் அறிவிப்பாா் என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் தொகுதி மறுவரைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
ஜிஎஸ்டி வரியில் 36 சதவீதம் பங்களிப்பு வழங்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு 27 சதவீதத்தை மட்டுமே திருப்பி அளிக்கிறது. ஆனால், 20 சதவீதம் பங்களிப்பு கொண்ட வட மாநிலங்களுக்கு 42 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த வகையில், நிதிப் பகிா்வில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
‘நீட்’ தோ்வு காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 20 போ் உயிரிழந்துள்ளனா். ‘நீட்’ தோ்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருப்பதால்தான், தமிழக அரசு சாா்பில் சட்ட ரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்து தமிழக முதல்வா் முடிவெடுப்பாா்.
கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதைத் திட்டம் குறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.