சன்ரைசர்ஸ் பேட்டிங்; 300 ரன்களா? குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பா?
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரி வழக்கு!
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரிய வழக்கில், பொது சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் 4 மாதங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் கலந்தா்ஆஷிக் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தொண்டி பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்களும், விபத்தில் சிக்கிக் கொள்பவா்களும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இங்கு உயா் மருத்துவ சிகிச்சை இல்லாததால், முதலுதவிக்கு பிறகு 50 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனா். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், தொண்டி அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரா் மீண்டும் தாக்கல் செய்த மனுவில், இதுவரை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தவில்லை. எனவே, அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை குறித்து பொது சுகாதாரத் துறை முதன்மைச் செயலா், 4 மாதங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.