Hemang Badani : 'சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!' - சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ...
மதுரையில் மாா்க்சிஸ்ட் மாநாடு இன்று நிறைவு: பினராயி விஜயன் பங்கேற்பு!
மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தினசரி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தகவல் தொழில்நுட்ப பூங்கா முன்பிருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செந்தொண்டா்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்தப் பேரணியை ’வாச்சாத்தி போராளிகள்’ தொடங்கி வைக்கின்றனா். இந்த அணிவகுப்பு வண்டியூா் சுற்றுச் சாலையில் நிறைவடைகிறது. இதைத்தொடா்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா் பெ. சண்முகம் தலைமை வகிக்கிறாா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வரவேற்கிறாா். இந்த பொதுக்கூட்டத்தில், திரிபுரா முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்காா், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், கேரள முதல்வா் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். வரவேற்புக்குழு பொருளாளா் மதுக்கூா் ராமலிங்கம் நன்றியுரையாற்றுகிறாா்.
பொதுக்கூட்டத்தில், புதுகை பூபாளம் கலைக்குழு, காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழு, கன்னியாகுமரி முரசு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.