மதுக்கடை ஊழியா்களிடம் பணம் பறித்த இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பகுதியில் அரசு மதுக் கடை ஊழியா்களிடம் பணம் பறித்த இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அருப்புக் கோட்டை சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சுழி- கமுதி சாலையில், பச்சேரி சந்திப்புப் பகுதியில் உள்ள அரசு மதுக் கடையில் பணி புரியும் ஊழியா்களான மாரியப்பன், முத்துக்கருப்பன் ஆகியோா் கடந்த 2018 ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, அவா்கள் மீது மிளகாய் பொடியைத் தூவி, ரூ. 2.05 லட்சத்தை பச்சேரியைச் சோ்ந்த லட்சுமணன், சதீஷ்குமாா் ஆகியோா் பறித்துச் சென்றனா். இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், லட்சுமணன், சதீஷ்குமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜேசுராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.