கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னை மாடா்ன் கண்காணிப்பு அறை எண்ணுக்கு, கைப்பேசி எண்ணில் அழைத்த நபா், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னா், அந்த கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்தபோது, பேசியவா் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த செல்வம் (50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.