ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
முல்லைப்பெரியாறு பிரச்னை; 'எம்புரான்' படக் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விவாதம்!
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கேரளாவில் இந்து மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில், முல்லைப்பெரியாறு அணை குறித்து வெறுப்பை உழிழும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டு விவாசய சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. பின்னர், தமிழ்நாடு அரசு தலையிட்டு முல்லைப்பெரியாறு குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டன.

சர்ச்சைக்குரிய வசனங்கள்
`எல் 2: எம்புரான்' படத்தில் முல்லைப்பெரியாறு அணையை நேரடியாகக் குறிப்பிடாமல், நெடும்பள்ளி அணை என்று கற்பனையாக ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதை வைத்துப் பேசப்படும் வசனங்கள் அனைத்துமே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகத்தான் இருந்தது.
2021-ல் பிருத்விராஜ், '125 ஆண்டுகள் பழைமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதை அனுமதிக்க முடியாது' என ட்விட்டரில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது `எல் 2: எம்புரான்' திரைப்படத்தில், 'நானும் நீங்களும் பொறக்கறதுக்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கட்டுப்பாட்டுல இருந்த ராஜாக்கள்ல ஒருத்தர் (திருவிதாங்கூர் மகாராஜா), சாம்ராஜ்ய பக்திங்கற பேர்ல, கையெழுத்துப் போட்ட ஒப்பந்த அடிப்படையில, 999 வருஷங்களுக்கு நிம்மதியா வாழ, தண்ணீர் சேகரிக்கறதுக்காக கட்டப்பட்ட டேம்தான் நெடும்பள்ளி டேம்.
இந்த டேமால வரப்போற ஆபத்துகள தடுக்கறதுக்கான தீர்வு, புது செக் டேம்ங்கற பேர்ல அவசர அவசரமா சுவர் எழுப்பறதால கிடைக்காதுனு உங்களுக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்?' என்று முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இல்லை என்ற வதந்திகளை, சர்ச்சைகளைக் கிளப்பிடும் வசனங்களை படத்தில் வைத்திருக்கிறார்.
இப்படியான சர்ச்சைக்குரிய வசனங்களை விவாசய சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு நீக்கியிருக்கிறது.

சட்டபேரவையில் விவாதம்
இந்த சர்ச்சைகள் குறித்து இன்றைய சட்டபேரவையில் பேசப்பட்டது. இது குறித்து அமைச்சர் துரைமுருகன், "நான் அந்த படத்தை பார்க்கவில்லை, அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும் கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில்கூட பிரச்னை வரலாம்" என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், "அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியே வந்த பிறகு இந்த செய்தி வெளியே வந்து. அதன் பிறகு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்புதான் அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார்.
நீரதிகாரம் Podcast
இப்போது 'நீரதிகாரம்' நாவலை விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாகவும் கேட்கலாம். ஆசிரியர் அ.வெண்ணிலா அவர்களே கூடுதல் தகவல்களுடன், விரிவாகத் தன் குரலில் இந்நாவலை ஒலிவடிவமாக வழங்கி இருக்கிறார்.
பென்னி குயிக் கட்டிய 'முல்லைப்பெரியாறு' அணை கட்டப்பட்ட வரலாறு, மதுரையின் தாது வருடப் பஞ்சத்தால் மக்கள் மடிந்த துயரம் உள்ளிட்டவற்றைப் பல தரவுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்நாவல். இந்த பெரும் வரலாற்றுப் பணியை செங்கோட்டை, கம்பம் என ஆரம்பித்து லண்டன் வரை சென்று தரவுகள் திரட்டி ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் அ.வெண்ணிலா.
வாங்க.... ஆசிரியர் அ.வெண்ணிலாவுடன் 'முல்லைப் பெரியாறு' அணை கட்டப்படுவதை அருகில் நின்று பார்க்கலாம். ஆடியோ அலையில் சுழன்று அணைக்கட்டப்பட்ட காலத்திற்குச் செல்லலாம்.
