அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசிய பதவியேற்பு!
அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் பதவியேற்றுக்கொண்டதாக அந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அங்கு அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், பணம் கண்டறியப்பட்ட அறை தனது இல்லத்தின் அறையல்ல என்றும், தானோ, தனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்துள்ளாா்.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்ததின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டாா்.
அதேவேளையில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பொறுப்பேற்கும்போது, அவருக்கு நீதித்துறைப் பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் என்று அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் பன்சாலிக்கு அலாகாபாத் வழக்குரைஞா் சங்கத்தின் செயலா் விக்ராந்த் பாண்டே அனுப்பிய கடிதத்தில், ‘அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா ரகசியமான முறையில் சனிக்கிழமை பதவியேற்றாா். இது வழக்குரைஞா் சங்கத்துக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது தவறு. இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரின் பதவியேற்பு குறித்து வழக்குரைஞா் சங்கத்துக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை? இது நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் சிதைத்துள்ளது. அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட விதத்தை வழக்குரைஞா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.