கைம்பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக 7,683 மகாராஷ்டிர கிராமங்கள் தீர்மானம்!
மகாராஷ்டிரத்தில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகளைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அதில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளைக் கூட்டி அங்குள்ள கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்களை அகற்றியுள்ளதாக அறிவித்துள்ளன.
கைம்பெண்களுக்கு எதிரான தீய பழக்கவழக்கங்களை ஒழிக்கும் இந்தப் பிரசாரத்தை சமூக செயல்பாட்டாளர் பிரமோத் சின்ஜாடே முன்னின்று நடத்தியுள்ளார்.
கைம்பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை வழங்கும்விதமாக மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் எனும் கிராமம் கடந்த 2022-ல் இந்தத் தீர்மானத்தை முதன்முதலில் நிறைவேற்றியது.
இதன்மூலம், அந்தப் பெண்கள் பொட்டு வைக்க, தாலி, மெட்டி அணிவதற்கானத் தடை நீக்கப்பட்டு அவர்கள் வளையல்களை உடைக்கும் சடங்குகள் ஒழிக்கப்பட்டன.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களை கணபதி பூஜையில் ஈடுபடுத்தி, விழாக்களில் கொடியேற்றுதல், ஹல்தி - குங்குமம் சூட்டுதல் போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க வைத்தல் போன்றவையும் கிராமத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நாட்டில் உள்ள கைம்பெண்களின் கண்ணியத்தைக் காக்கவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்கவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்தாண்டு ஆலோசனை வழங்கியது.
12 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த வைஷாலி பாட்டீல் கூறுகையில், "விதவைகள் இங்கு கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். நாமும் மனிதர்கள் என்பதை மனிதர்கள் உணர்ந்துவிட்டனர். பழைய நிலைமை மாற வேண்டும். பழைய பழக்கவழக்கங்களை ஒரே இரவில் நிறுத்த முடியாது" என்று தெரிவித்தார்.
இதேபோல, நாசிக் மவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், "கைம்பெண்களுக்கு பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம், வீடுகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கிராம பஞ்சாயத்து உறுதியாக இருக்கிறது" என்று கிராமவாசி ஒருவர் கூறினார்.
மேலும், 76 கிராம பஞ்சாயத்துகளில் கைம்பெண்கள் தொடர்பான பழங்கால பாகுபாடுகளை பின்பற்ற மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். இது தொடர்ச்சியாக, பல கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
”கைம்பெண்களுக்கு எதிரான பழைய நடவடிக்கைகளைத் தடை செய்ய அரசாங்கத்திடம் ஒரு வரைவுச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தொடர்ந்து பிரசாரம் செய்யவேண்டும். அரசின் அங்கன்வாடி பணியாளர்கள் இதில் பெரும் உதவியாக இருக்க முடியும்" என்று அவர் கூறினார்.