பிகாரில் ராகுல் தலைமையில் வெள்ளை டி-ஷர்ட் பேரணி
பிகாரிலிருந்து வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தக் கோரியும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் இன்று வெள்ளைச் சட்டை பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெகுசராய் நகரின் மத்தியப் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்தப்பேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வெள்ளைச் சட்டையுடன் இளைஞர்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில், உடனடியாக பாதுகாப்புப் படைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தும் பதாகைகளை இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் கையில் வைத்திருந்தனர். முழக்கங்களையும் எழுப்பினர்.
இடம்பெயர்வதை நிறுத்துங்கள், வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்ற தலைப்பில் இன்று நடைபெற்று வரும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்து ராகுல் முன்னதாக ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில், பிகார் இளைஞர்களே, நான் உங்கள் பேரணியில் உங்களின் தோளோடு தோள் நின்று போராட பெகுசாரை வருகிறேன்.
பிகார் இளைஞர்களின் பிரச்னை, போராட்டம், உணர்வு என அனைத்தையும் உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம் என்றும், அனைவரும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து வாருங்கள், கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளை எழுப்புங்கள், வரும் பேரவைத் தேர்தலில் அந்த அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.