`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்...
மேட்டூர் அணை: ஜூன் 12-ல் திறந்து வைக்கிறார் முதல்வர்!
மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
மேல்நிலை மதகு, கீழ்மட்ட மதகு, சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”மேட்டூர் அணை பராமரிப்பு சிறப்பாக உள்ளது. வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆய்வுப் பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது.

மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ளனர், அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது ரூ 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும் மீண்டும் பாசன காலம் முடித்த பிறகு பணிகள் துவக்கப்படும்” என்றார்.
ஆய்வின் போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாள குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.