RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்...
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற, தொல்லியல் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன்.
உலகிற்கே முன்னோடியாக தொழில்நுட்பம், கலை, இலக்கியம், சிற்பங்கள், கொடை, வீரம், ஐந்து வகை நிலப்பரப்புகள் என பண்டைய தமிழர்களின் வாழ்வு சிறந்து விளங்குவதையும், அதற்கு புறச்சான்றுகளாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் என பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் கிடைக்கப்பெற்ற தொல்பொருள்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்லியல் துறை முன்னெடுப்புகள், 18ற்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சிகள், புதிய அருங்காட்சியகங்கள், 5300 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு தொழில்நுட்ப கால முடிவுகள் எனப் பலவற்றையும் விவரித்துப் பேசினேன்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி,ஒளி காட்சி அமைக்கப்படும், தமிழ்நாட்டின் தொன்மையையும் பண்டைய தமிழ்நாட்டு அரசியல் சமூக பொருளாதார வரலாற்றைப் பறைசாற்றக் கூடிய கல்வெட்டுக்களை காலவாரியாகத் தொகுத்து கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 நினைவுச் சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்