தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் வலி; வெளியேறாத ப்ளீடிங்.. விசித்திர பிரச்னைக்கு தீர்வு என்ன?
Doctor Vikatan: என்னுடைய தோழியின் மகளுக்கு 12 வயதாகிறது. அவள் இன்னும் பூப்பெய்தவில்லை. ஆனால், மாதந்தோறும் அவளுக்கு பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படுவது போன்ற வலி ஏற்படவே, அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர் பரிசோதித்துவிட்டு அவளுக்கு வெஜைனா பகுதியில் சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். இது என்ன விசித்திரமான பிரச்னை... இந்த ஆபரேஷனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படுமா... அதன் பிறகு அவள் பூப்பெய்த வாய்ப்பிருக்கிறதா...?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
உங்கள் தோழியின் மகளைப் பரிசோதித்த மருத்துவர் சரியான தீர்வையே சொல்லியிருக்கிறார். முதலில் இது எப்படிப்பட்ட பிரச்னையாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பெண்களுக்கு வெஜைனா பகுதியில் ஹைமன் எனப்படுகிற மெல்லிய திசு ஒன்று இருக்கும். இந்த ஹைமன் திசுவில் மாதவிடாய் ரத்தம் வெளியேற துளை ஒன்று இருக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயே இந்தத் துளை உருவாகாமல் இருக்கலாம்.
பருவ வயதை எட்டியதும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும். மாதவிடாய் ரத்தமும் உருவாகத் தொடங்கிவிடும். அதாவது கர்ப்பப்பையிலிருந்து எண்டோமெட்ரியம் லைனிங்கானது வெளியே வரும். ஆனால், அது வெஜைனாவின் உள்ளேயோ, கர்ப்பப்பையிலோ சேரத் தொடங்கும்.
மாதந்தோறும் 80-90 மில்லி அளவு வெளியேற வேண்டிய ரத்தமானது வெளியே வராமல், உள்ளேயே தங்குகிறது. மாதந்தோறும் இப்படிச் சேரும் ரத்தத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதால், வலியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

திடீரென ஒருநாள் அதீத வலியோடு மருத்துவரைப் பார்க்க மகளை அழைத்து வருவார்கள். அந்தப் பெண், சிறுநீரைக்கூட வெளியேற்ற முடியாத நிலையில் துடிப்பார்.
இவர்களைப் பரிசோதித்துப் பார்த்தால், வெஜைனா பகுதியின் திறப்பானது வீங்கி இருப்பது தெரியவரும். வயிற்றுப்பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து பார்த்தால் சிறுநீர்ப்பை நிரம்பி, பெரிதாக இருப்பதும், வெஜைனல் குழியில் ரத்தம் சேர்ந்திருப்பதும் தெரிய வரும்.
இதை 'ஹெமட்டோகால்போஸ்' (Hematocolpos) என்று சொல்வோம். ஏற்கெனவே, ரத்தம் நிறைய தேங்கியிருந்ததன் விளைவாக, அது சிறுநீர்ப்பையை அழுத்தி, சிறுநீர் வெளியேற முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைமன் பகுதியில் அறுவை சிகிச்சை முறையில் சிறிய துளையை ஏற்படுத்தினால் அத்தனை நாள்கள் தேங்கியிருந்த ரத்தமெல்லாம் வெளியேறி விடும். அதன் பிறகு சில நாள்கள் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியிருக்கும். பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி இயல்பாக மாறி விடும்.

இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. இவர்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குழாய் உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. வெஜைனாவின் திறப்பில் இருக்கும் பிரச்னையை எளிதாக சரிசெய்துவிட முடியும். பிற்காலத்திலும் எந்தப் பிரச்னைகளும் வர வாய்ப்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.