Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?
Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே பப்பாளிப்பழம் மிகவும் பிடிக்கும். இப்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பிணிகள் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கை காலங்காலமாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை... பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா, கூடாதா என்ற கேள்வி காலங்காலமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையாகவே இருக்கிறது. சிலர் சாப்பிடலாம் என்பார்கள்... இன்னும் சிலர் சாப்பிடக்கூடாது என்பார்கள். இதில் எது சரி, எதைப் பின்பற்றுவது என்ற குழப்பம் கர்ப்பிணிகளுக்கு இன்றுவரை தொடர்கிறது.
நம்மிடம் பப்பாளி தவிர்த்து எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. பப்பாளியைவிடவும் நல்ல தன்மைகள் கொண்ட, ஆரோக்கியமான பழங்கள் எத்தனையோ இருக்கின்றன. அப்படியிருக்கையில், சர்ச்சைக்குரிய பப்பாளியை சாப்பிடலாமா, வேண்டாமா என பட்டிமன்றம் நடத்துவது தேவையே இல்லை.
பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றாலும் பப்பாளியில் 'பப்பாயின்' (Papain) என்றொரு என்ஸைம் இருக்கிறது. இந்த என்ஸைம், சிலருக்கு ப்ளீடிங்கை ஏற்படுத்தலாம். அதனால் அபார்ஷன் ஆகவும் வாய்ப்புகள் உண்டு.

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுகிறவர்களில் யாருக்கு ப்ளீடிங் ஏற்படும், யாருக்கு கருக்கலைப்பு நிகழும் என்பதையெல்லாம் அறிவியல்ரீதியாகச் சொல்லவே முடியாது. கர்ப்ப காலத்தில் எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருக்கும். அதனால் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லியே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. பப்பாளி மட்டுமல்ல, அன்னாசிப் பழத்தையும் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, மற்ற பழங்களை உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். கர்ப்பகால நீரிழிவு உள்ள பெண்கள் மட்டும் பழங்கள் சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
