மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!
Doctor Vikatan: மார்பகங்களில் காணப்படும் பருக்கள்... புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?
Doctor Vikatan: என் வயது 24. எனக்கு மார்பகங்களில் நிப்பிளை சுற்றிலும் குட்டிக்குட்டியாக பருக்கள் போன்று இருக்கின்றன. இவை சாதாரண பருக்கள் என எடுத்துக்கொள்வதா அல்லது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா...?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மார்பகங்களை சுய பரிசோதனை செய்து திடீரென காணப்படுகிற மாற்றங்கள் குறித்து தெளிவுபெறுவது என்பது மிக மிக அவசியமான, நல்ல விஷயம். அதே சமயம், அப்படி நீங்கள் உணர்கிற அத்தனை அறிகுறிகளும் மார்பகப் புற்றுநோய் தொடர்புடையவை என பயப்படவும் தேவையில்லை.
மார்பகங்களில் நிப்பிளை சுற்றி பருக்கள் மாதிரி ஏற்படுவதற்கு 'மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ்' (Montgomery's tubercles) என்று பெயர். செபேஷியஸ் சுரப்பிகள் எனப்படும் எண்ணெய் சுரப்பிகள், நிப்பிளை சுற்றியுள்ள ஏரியோலா என்ற கரும்பகுதியில் குட்டிக்குட்டியாக, பொரிப்பொரியாகக் காணப்படும். கர்ப்பிணிகளுக்கு இது அதிகம் இருக்கும். மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ் சுரப்பியிலிருந்து வெளியேறும் சுரப்பானது கிருமிகளால் தாய்ப்பால் கலப்படமாகாமலிருக்கவும் அந்தப் பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படாமலிருக்கவும் காப்பாற்றும் தன்மை கொண்டது. இரண்டு முதல் இருபத்தைந்து, இருபத்தெட்டு எண்ணிக்கை வரை இந்த மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ் நிப்பிளை சுற்றி காணப்படலாம்.

இவை கர்ப்பகாலத்தில் மட்டுமன்றி, பூப்பெய்தும் பருவத்திலும், பூப்பெய்திய பிறகு பீரியட்ஸ் சுழற்சி வருவதற்கு முன்பும் இருக்கும். ஸ்ட்ரெஸ், ஹார்மோனல் இம்பேலன்ஸ், எடை ஏறுவது, இறங்குவது, டைட்டான உள்ளாடை அணிவது போன்றவற்றாலும் சில நேரம் இப்படி வரலாம். வழக்கமாக இது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் மார்பகக் காம்புகள் உள்ளிழுத்த நிலையில் இருப்பது, அசாதாரண கசிவு, மாற்றங்கள் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்