மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
மதுரையில் காவலர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!
மதுரையில் காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கைதான ஆட்டோ ஓட்டுநர், பணத்துக்காக காவலரை எரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 19 ம் தேதி மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய, தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஈச்சனேரி பகுதியில், விருதுநகரைச் சேர்ந்த மலையரசன் என்பவர் உடல் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வகையில் இறந்து கிடந்தார்.
உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பலியானவர் சிவகங்கை காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் மலையரசன் என்பதும், அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரிய வந்தது.
இவர் சிவகங்கை காளையார் கோயிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடைய, கடந்த 1ஆம் தேதி விபத்தில் சிக்கிய இவரது மனைவி 5 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
ஒரு பக்கம் விபத்தில் சிக்கிய மனைவி மரணம், அடுத்து மலையரசன் மரணம் என அடுத்தடுத்து தம்பதி மரணமடைந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மலையரசன் மரணம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறைக்கு, காவலர் மலையரசன், சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவியின் சிகிச்சை கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈச்சனேரி பகுதியில் தான் பாதி எரிந்த நிலையில் மலையரசன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளையும், பண பரிமாற்றம் செய்ததன் விவரங்களையும் அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் காவல்துறை இன்று காலை ஒருவரை சுட்டுப்பிடித்துள்ளனர்.
ஆட்டோவில் பல நாள்கள் காவலர் மலையரசன் சவாரி சென்றபோது ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் ஓரமான காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, காவலர் மலையரசன் ஜி பே மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்த போது அவரது பாஸ்வேர்டை நோட்டம் விட்ட ஆட்டோ ஓட்டுநர், வங்கிக் கணக்கில் பணம் அதிகமாக வைத்திருப்பதை அறிந்து அதனை தனது வங்கிக் கணக்குக்குக் மாற்ற முயன்றுள்ளார்.
இந்த தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரை தலையில் அடித்து ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்துவிட்டு பின்னர் எரித்து பெருங்குடி அருகே வீசி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை பெருங்குடி காவல்துறையினர் வலது காலில் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த நிலையில் மூவேந்திரனை பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து மதுரை எஸ் பி அரவிந்தன் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இன்று காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.