ஜார்க்கண்ட்: மத ஊர்வலத்தில் கல் வீச்சு! காவல் துறையினர் விசாரணை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹசாரிபாக் மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜமா மஸ்ஜித் சௌக் என்ற இடத்தில் நேற்று (மார்ச் 25) இரவு 11 மணியளவில் மங்கல ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதில், இருதரப்பினருக்கு இடையில் உண்டான மோதலில் கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை!
இந்த சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்த தகவல்கள் தெரிய வராத நிலையில் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அங்கு இசைக்கப்பட்ட சமூக ரீதியான பாடல்களினால் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.