'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ்
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " 'எல்லாம் நன்மைக்கே'. அதிமுக கட்சியில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைவதுதான் என்னுடைய விருப்பம். அமிஷாவை அவர் சந்தித்தது குறித்து அவரிடம் கேளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.