செய்திகள் :

`இந்தநாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டதா?’ - குனால் கம்ரா, ஷிண்டே சர்ச்சை | என்ன பிரச்னை?

post image

மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஹாட் டாபிக், நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான்.

ஸ்டாண்ட் அப் காமெடியன் (standup comedian) குனால் கம்ரா, சமீபத்தில் நடைப்பெற்ற காமெடி ஷோ ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்டு பாடியது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஷிண்டேவை விமர்சித்ததற்காக குனால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கியும் அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். ஆனால் ‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’ என்று குனால் கம்ரா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

குனால் கம்ரா

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா. இவரின் நகைச்சுவை பெரும்பாலும் அரசியலை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கும். இந்திய அரசியல் மற்றும் சமூக விவகாரங்களை நையாண்டியாகப் பேசி வரும் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. 'kunal kamra' என்ற பெயரில் யூடியூப் சேனலையும், 'Shut Up Ya Kunal' என்ற பெயரில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

ஸ்டாண்ட் அப் காமெடியனான குனால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் Naya Bharat’ என்ற தலைப்பில் வீடியோவை ஒன்றை வெளியிட்டிருந்தார். சர்ச்சையின் மையப்புள்ளி அந்த வீடியோதான்.

அதில் ‘தில் தோ பகல் ஹை’ படத்தின் ஒரு பாடலை நகைச்சுவையாக மாற்றி ஏக்நாத் ஷிண்டேவை மறைமுகமாக விமர்சித்திருந்தார் குனால் கம்ரா. அதாவது `தானேயில் ஆட்டோ ஓட்டிய ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வரானது குறித்தும், அவர் சிவசேனாவை உடைத்தது குறித்தும், அவரை துரோகி என்று விமர்சித்தும்’ பாடலை பாடி இருந்தார். ஏக்நாத் ஷிண்டேவை 'துரோகி' என குறிப்பிட்டு பாடியதால் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

குனால் கம்ரா ஷிண்டே விவகாரம்

அந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி தொண்டர்கள் மும்பையில் நிகழ்ச்சி நடந்த இடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் ஸ்டுடியோவை சேதப்படுத்தி இருகின்றனர்.

மேலும் மும்பை மாநகராட்சி அவரின் ஸ்டூடியோவில் சட்டவிரோத கட்டமைப்பு உள்ளதாக சொல்லி இடித்துள்ளது. இதற்கு முன்னதாக நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குனால் தரப்பின் குற்றச்சாட்டு.

இந்த சம்பவம் தொடர்பாக ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியின் எம்எல்ஏ முர்ஜி பட்டேல் அளித்த புகாரை அடுத்து குனால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஸ்டுடியோவை உடைத்த வழக்கில் 11 சிவசேனா தொண்டர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

இந்த விவகாரம் குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, “ இங்கே கருத்துச் சுதந்திரம் உள்ளது. நையாண்டியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த நகைச்சுவைக் கலைஞர் ஒருவருக்கு எதிராக பேசுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது போல தெரிகிறது. அவர் என்னைப் பற்றி மட்டும் இல்லை, நமது பிரதமர், உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்களைப் பற்றியும் கேலி செய்திருக்கிறார்.

இதைக் கருத்துச் சுதந்திரம் எனக் கூறமுடியாது யாருக்காவோ வேலை செய்வது போல இருக்கிறது. வன்முறையில் தனக்கு உடன்பாடு இல்லை, அதேசமயம் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு’ என்று தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் , “ ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்க முயன்ற விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. குனால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்

“ கருத்துச் சுதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களை புகழ்வது மட்டுமே என்று சுருங்கி விடக்கூடாது. நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் போலீஸாருடன் ஒத்துழைக்கத் தயார். நான் தெரிவித்த கருத்துக்களுக்கு படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோ அல்லது எந்தவித அரசியல் கட்சியோ காரணம் கிடையாது. எனது ஷோ படப்பிடிப்பு நடந்த இடம் அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும் ஒரு இடம். எனது நிகழ்ச்சிக்கு படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவோ அல்லது வேறு யாரோ அல்லது அரசியல் கட்சியோ நான் தெரிவித்த கருத்துக்களுக்கு காரணம் கிடையாது.

ஒரு நகைச்சுவை நடிகரின் வார்த்தைகளுக்காக ஒரு இடத்தைத் தாக்குவது என்பது, உங்களுக்கு பரிமாறப்பட்ட பட்டர் சிக்கன் பிடிக்கவில்லை என்பதற்காக, அதற்கு பயன்ப்டுத்திய தக்காளி ஏற்றிச் செல்லும் லாரியை கவிழ்ப்பது போன்ற முட்டாள்தனம்” என்று குனால் கம்ரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே பிரச்னை ஒரு புறம் இருக்க மறுபுறம் டி-சீரிஸ் (T- SERIES) நிறுவனம் குனால் கம்ராவுக்கு தலைவலியைக் கொடுத்திருக்கிறது. அதாவது, ஷிண்டேவை மறைமுகமாக விமர்சித்து வெளியிட்டிருந்த அந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களையும் அவர் விமர்சித்திருந்தார். அந்த வீடியோ கிட்டத்தட்ட 9 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கும் நிலையில் திடீரென்று யூடியூப் வலைதளத்தில் அந்த வீடியோவின் பணம் ஈட்டும் வாய்ப்பு (monetization) முடக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் கட்டும் வரியினை அரசாங்கம் எவ்வாறு வீணடிக்கிறது என்பதை நகைச்சுவையாக மிஸ்டர் இந்தியா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹவா ஹவாய்’ பாடலினை மாற்று வரிகளில் பாடி விமர்சித்திருப்பார். பாடலுக்கான காப்புரிமை (copyright) டி-சீரிஸ் நிறுவனத்திடம் உள்ளது. குனால் கம்ரா இந்த பாடலை பயன்படுத்த தங்களிடம் முறையான உரிமம் பெறவில்லை என டி-சிரீஸ் நிறுவனம் தெரிவித்து copyright strike அடிப்படையில் பணம் ஈட்டும் வாய்ப்பினை (monetization) முடக்கியுள்ளது.

குனால் கம்ரா -டி-சீரிஸ்

டி-சீரிஸ் செயல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த குனால் கம்ரா, “ டி- சீரிஸ் ஒரு கைக்கூலி போல் செயல்படுவதை நிறுத்துங்கள். ஒரு விஷயத்தை பகடி, நையாண்டி செய்வது என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நான் பாடலின் வரிகளையோ, அசல் இசையினையோ பயன்படுத்தவில்லை. இந்த வீடியோவினை நீங்கள் முழுமையாக நீக்கினால், பல்வேறுத் தளங்களில் பதிவிடப்படும் பாடல்/நடன வீடியோவினையும் நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரின் இந்த பதிவினை அடுத்து, பணம் ஈட்டும் வாய்ப்பு முடக்கப்பட்ட யூ-டியூப் வீடியோவில் ‘thanks’ ஆப்ஷனை பயன்படுத்தி பல்வேறு ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான தொகையினை வழங்கி வருகிறார்கள். ‘நீங்கள் மிகவும் தைரியமானவர். எப்போதும் போல் உங்கள் பணிகளை தொடருங்கள்…நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ என்று பலரும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் விழுப்புரத்தில் தங்கி இருக்கும் குனால் கம்ரா முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி வழக்கை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

குனால் கம்ரா

`இந்த நாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டது’

சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் பேசினோம். இதுதொடர்பாக பேசிய அவர், "குனால் கம்ரா சம்பவத்தைப் பொறுத்தவரை அது புதிதாக நடக்கும் ஒரு விஷயம் அல்ல. இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆட்சி செய்ய தொடங்கியதில் இருந்து இதுபோன்ற அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமேதான் இருக்கிறது. கௌரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றவர்களும் இதுபோன்ற அடக்குமுறைகளைதான் முதலில் சந்தித்தார்கள்.

ரொட்டியுடன் உப்பு கொடுக்கிறார்கள் என்று எழுதியதற்காக ஒரு பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டார். மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களில் இருப்பவர்களையும் பழிவாங்கும் போக்கு இப்போதும் இருக்கிறது. தனிநபர்களாக சமுதாயத்திற்காக நாம் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் தற்போது கொடுரமான முறையில் மௌனமாக்கப்படுகிறார்கள். குனால் கம்ரா விஷயத்தில் இந்த நாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கவிதா முரளிதரன்

எதேச்சதிகாரத்தின் மிக மோசமான ஒரு போக்கு இது. இந்திய நாட்டை ஆண்ட நேருவுக்கு எதிராக நிறைய அரசியல் நையாண்டி கார்ட்டூன்ஸ் எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். அதனை அவர் எவ்வளவு நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார் என்று எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு குனால் கம்ரா மட்டுமல்ல நிறைய ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் இதுபோன்று பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2021முனாவர் ஃபரூக்கி என்ற ஸ்டாண்ட் அப் காமெடியன் பாஜக அரசுக்கும், இந்துத்துவத்திற்கும் எதிராகப் பேசி வருகிறார் என்று கைதுசெய்யப்பட்டார்.

குனால் கம்ராவிற்கு இந்தப் பிரச்னையை அவரால் எதிர்கொள்ள முடியும் என்ற ஒரு தைரியம் இருக்கிறது. சட்டங்கள் எப்படி மக்களின் குரல்களை ஒடுக்குவதற்குப் பயன்படுகின்றன என்பதை நாம் கட்டாயம் பார்க்க வேண்டும். எந்தக் கேள்வியும் இல்லாமல் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி நேர்காணல் ஒன்றில் ANI செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷை ‘இன்றைய ஊடகங்கள் வளைந்து கொடுக்கின்றன’ என்று விமர்சித்திருந்தார். பெரும்பாலும் வட இந்தியாவில் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் பாஜகவிற்கு வளைந்து கொடுக்கும்படிதான் இருக்கிறார்கள்.

குனால் கம்ரா

அப்படி வளைந்துக்கொடுக்க முடியாது என்பவர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். அதேபோல சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆர்மியை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை நசுக்குகிறார்கள். கருத்து சுதந்திரத்தில் இந்தியா மிகவும் மோசமான ஒரு நிலையில்தான் இருக்கிறது.

சுதந்திரமான பேச்சுரிமையைத் திட்டமிட்டு பாஜக தாக்குகின்றது. தங்களுக்கான எதிர்ப்பு குரல் எந்தவகையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். நேரு மாதிரியான அரசியல் தலைவர்கள் இருந்த இடத்தில் குனால் கம்ரா மாதிரியானவர்களுக்கு இதுபோன்ற சம்பங்கள் அறங்கேறுவது கருத்துச் சுதந்திரத்தின் வீழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது" என்று முடித்தார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க